வள்ளுவர் கோட்டம் 'காதல்' கோட்டமாகிறது
தினமலர், சென்னை, ஜூன் 02
வள்ளுவர் கோட்டம் 'காதல்' கோட்டமாகிறது. சோம்பேறிகளின் புகலிடமாகவும் சீரழிகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் உரிய பராமரிப்பு இல்லாமல் பாழாகிக் கொண்டிருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் தி.மு.க., ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது, தகுந்த பராமரிப்பு இல்லாததால் வள்ளுவர் கோட்டம் ஆங்காங்கே இடியும் நிலையில் உள்ளது. குறள் கல்வெட்டுகள் எல்லாம் எச்சில் துப்பும் இடமாக கவனிப்பின்றி இருக்கிறது. வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றி திருக்குறள் மட்டுமல்லாமல், அதற்கு போட்டியாக ஆங்காங்கே காதலர்களின் நவீன கல்வெட்டுக்களும் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. வள்ளுவருக்கு எழுப்பப்பட்ட தேர் காதலர்களின் புகலிடமாகவும், சோம்பேறிகளின் உறைவிடமாகவும் மாறி உள்ளது. தேரின் உச்சியில் தேனீக்களும் ஆங்காங்கே கூடு கட்டி பொதுமக்களை அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது. வள்ளுவர் கோட்டத்தின் மேல் தளத்தின் ஒரு பகுதி பாதியாக இடிந்து, உயிரிழப்பை ஏற்படுத்த காத்திருக்கிறது. திருக்குறளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஆங்காங்கே அழகிய ஓவியங்களுடன் கூடிய குறள் விளக்கங்களும் வரிசையாக வைக்கப் பட்டுள்ளன.அத்தகைய ஓவியங்கள் பராமரிப்பு இல்லாததால் பூச்சிகளால் அரித்தும், மழை நீரில் நனைந்தும் அழிந்து வருகின்றன.