நெஞ்சு பொறுக்குதில்லையே...
தினமணி, சென்னை, ஜூன் 5
கர்நாடக மாநிலத்தில் கழிப்பறை ஒன்றில், ஆண்களின் அடையாளச் சின்னமாக மகாகவி பாரதியின் படம் வரையப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.உடனடியாக படத்தை கழிப்பறையில் இருந்து அழித்துவிட்டு, இச் செயலைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
கவிஞர் வைரமுத்து:
செய்தி கண்டு அதிர்ந்து போனேன். மாறிமாறி வந்தன வெட்கமும் துக்கமும். அறிந்து செய்திருந்தாலும் அறியாமல் செய்திருந்தாலும் இது மன்னிக்க முடியாத பிழை.கழிப்பறைச் சுவரில் மகாகவியின் உருவத்தைப் பொறித்திருப்பது சமூகப் பிழையோடு கூடிய சரித்திரப் பிழை. வேறெங்கு நிகழ்ந்திருந்தாலும் அறியாதார் செய்த தவறென்று கொள்ளலாம். கர்நாடக மாநிலத்தில் இது நிகழ்ந்திருப்பது உள்நோக்கம் உள்ளதோ என்று கவலைகொள்ள வைக்கிறது.இந்திய ஏவுகணையில் பொறிக்கப்பட வேண்டிய மகாகவியின் உருவம் கழிப்பறையிலா? அந்த மீசைச் சூரியனை - தமிழின் தேசிய அடையாளத்தை இவ்வளவு இழிவு செய்வதா? உடனே அழிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் தன்னிலை விளக்கம் தர வேண்டும். கர்நாடக அரசு தலையிட வேண்டும். இல்லாவிட்டால் கவிஞர்கள் திரண்டு தலையிட வேண்டியிருக்கும். இதை இதயக் குமுறல் என்று கொண்டாலும் சரி; எச்சரிக்கை என்று கொண்டாலும் சரி.
பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன்:
இது தமிழ் மக்களின் உணர்வை அவமதிப்பதும் தமிழ்ப் பெரும் கவிஞனை அவமதிப்பதும் ஆகும்.இந்த அவமதிப்பை உடனே நீக்க கர்நாடக அரசு உத்தரவிட வேண்டும். மேலும் இக் கண்டனத்துக்குரிய செயல் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டார்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
கொடுமையிலும் கொடுமை இது. "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதனை நினைந்துவிட்டால்' என்றுதான் ஆத்திரமும் கவலையும் எழுகிறது.திருவள்ளுவர் சிலையைக் கோணிப் பையில் மூடி வைத்தனர். காவிரியில் தமிழகத்தின் உரிமையைப் பறித்தனர். இந்த தொடர் கொடிய சங்கிலி நிகழ்வுகளில் இன்றைக்குப் பாரதியார் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். கவிஞன் குவெம்புக்கு இதுமாதிரி நேர்ந்தால் கர்நாடகத்தினர் பார்த்துக்கொண்டு இருப்பார்களா? பாரதியைச் சிறுமைப்படுத்தும் இந்த அநாகரிக செயல், திட்டமிட்டு கேளிக்கையாகச் செய்யப்பட்டு உள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.
காங். தலைவர் குமரி அனந்தன்:
அவமானத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஆண்மையின் சின்னம் பாரதி. அவன் வீரத் திருவுருவமாக காட்சியளிக்கும் படம் கர்நாடக சட்டப் பேரவையில் வைப்பதற்கு தகுதி படைத்தது. அந்த படத்தைக் கழிப்பறையில் இருந்து எடுப்பதோடு நடந்துவிட்ட செயலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
0 மறுமொழிகள்:
Post a Comment